‘தனது திரைப்படங்கள் மூலம், சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டியவர் எம்ஜிஆர்’ திருப்பூரில் சைதை துரைசாமி பேச்சு

Tirupur News,Tirupur News Today- எம்.ஜி.ஆர். தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டியவர் என்று, திருப்பூரில் நடந்த எம்ஜிஆர் 106வது பிறந்த நாள் விழாவில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசினார்.

Update: 2023-06-12 02:31 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசினார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.பக்தர்கள் பேரவை சார்பில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சிட்டி பி.பழனிச்சாமி தலைைம வகித்தார். பிரான்ஸ் எம்.ஜி.ஆர்.பேரவை தலைவரும், உலக எம்.ஜி.ஆர்.பேரவை ஒருங்கிணைப்பாளருமான முருகுபத்மநாபன் முன்னிலை வகித்தார். செல்வராஜ் வரவேற்றார்.

விழாவில் சென்னை மாநகர முன்னாள் மேயரும், உலக எம்.ஜி.ஆர்.பேரவை தலைவருமான சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது,

பாமர மக்களால் மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்று போற்றப்பட்டு பேராதரவைப் பெற்றவர் எம்.ஜி.ஆர். தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டியவர். சமூக நீதியையும், சமத்துவத்தையும் மற்றும் பாமர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான திட்டங்களை பாடல்களாக, வசனங்களாக கொண்டு வந்தார். 1954-ம் ஆண்டு வெளிவந்த மலைக்கள்ளன் படத்தில், "தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்வோம்..." என்று பாடினார். அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஒவ்வொரு ஊரிலும் பள்ளிக்கூடம் திறந்தார்.

'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் லோகோவில் தி.மு.க.வின் இரு வர்ணக்கொடியை முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். புரட்சிகரமான வசனங்களாலும், சூப்பர்ஹிட் பாடல்களாலும் நாடோடி மன்னன் அடைந்த மாபெரும் வெற்றியை அடுத்து, ஆங்காங்கே எம்.ஜி.ஆர். மன்றங்கள் திறக்கப்பட்டன. படத்தின் வெள்ளிவிழாவில் பேரறிஞர் அண்ணா, 'இதயக்கனி' என்று எம்.ஜி.ஆரை போற்றிப் பாராட்டினார். 

புரட்சித்தலைவரின் திரைப்படங்களை திரைப்பாடங்களாக நம்பிய பாமர மக்களின் நம்பிக்கையை, ஆட்சியின் மூலம் நிறைவேற்றி, மக்களின் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு கலையாக இருந்த சினிமாவின் மூலம் மக்களின் வாழ்வியல் பண்புகளை வார்த்தெடுக்கவும், சமூக மாற்றத்தை உருவாக்கவும், "என்றும் தேவை எம்.ஜி.ஆர். கொள்கை" என்ற பாமர மக்களின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. புரட்சித்தலைவர் ஓர் அவதாரம் என்று நான் சொல்வதற்கு காரணம், அவருடைய தீர்க்கதரிசன சிந்தனை மற்றும் தொலைநோக்கு பார்வைதான். 

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் குணசேகரன், மீனாட்சி சுந்தரம், தங்கமுத்து, அண்ணாதுரை, கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ., திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார், சூலூர் எம்.எல்.ஏ. கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சு.குணசேகரன், பழனிச்சாமி, துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, கோல்டன்நகர் பகுதி செயலாளர் ஹரிகரசுதன், கவுன்சிலர் சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பக்தர்கள் பேரவை கவுரவ ஆலோசகர்கள் சிவநடராஜன், பாண்டிபாலா, ராசுஅகிலன், நிர்வாகிகள் நடராஜன், ரோகிணிகுமார், பால் வின்சென்ட், ராமகிருஷ்ணன், வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி குழந்தைகளின் ஓவியப்போட்டி, சிலம்பாட்டம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஸ்ருதிலயா குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சைதை துரைசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதேபோல் சைதை துரைசாமிக்கு எம்.ஜி.ஆர். பக்தர்கள் பேரவை, அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் கவுரி கனகு என்ற கனகராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News