வங்கதேசபின்னலாடைத் துணிகள் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அமைச்சாிடம் கோரிக்கை
Tirupur News- வங்கதேசத்தில் இருந்து சுங்க வரியின்றி பின்னலாடைத் துணிகள், பின்னலாடைகள் இறக்குமதியாவதைத் கட்டுப்படுத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, திருப்பூரில் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.;
Tirupur News- மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலிடம், திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சக்திவேல், தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் மனு அளித்தனர்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூருக்கு தந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலை, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சக்திவேல், தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அவர்கள் மனுவில் கூறியிருப்பதாவது,
பிரதம மந்திரி ஒருங்கிணைந்த மெகா ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்கா தமிழகத்தில் தொடங்கப்பட்டதற்கு நன்றி. திருப்பூரைச் சோ்ந்த 50 ஏற்றுமதி நிறுவனங்கள் இந்தப் பூங்காவில் தொழிற்சாலை அமைக்க விரும்புவதால் உடனடியாக இந்தப் பூங்காவை மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் பயனடையும் வகையில் முதலீடு மற்றும் விற்பனையை உள்ளடக்கிய உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தை (பிஎல்ஐ 2.0) உடனே அறிவிக்க வேண்டும்.
தொழில் மேம்பாடு நிதி திட்டம் கடந்த மாா்ச் 31-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டதால் இதற்கு மாற்றாக ஒரு புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். பிரிட்டனுடன் வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் இந்த மாத இறுதியில் ஏற்படும் என்று எதிா்ப்பாா்க்கப்படவுள்ள நிலையில், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பின்னலாடை துணிகள், பின்னலாடைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
ஆகவே, இந்த இறக்குமதியைக் கட்டுப்படுத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வட்டி சமன்படுத்தும் திட்டத்தின்கீழ் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வட்டி சலுகையும், இதர பின்னலாடை பெரு நிறுவனங்களுக்கு 3 சதவீத வட்டி சலுகையும் திரும்ப அளிக்க வேண்டும்.
அவசர கடன் இணைப்பு உத்தரவாதத் திட்டத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளித்தபோது, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் திருக்குமரன், பொருளாளா் கோபாலகிருஷ்ணன், இணைச் செயலாளா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.