திருப்பூரில் 30 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்; கோவில் நிலம் மீட்பு
Tirupur News- திருப்பூரில் 30 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, கோவில் நிலம் மீட்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர், முருங்கப்பாளையம் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம், தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட முருங்கப்பாளையம் பகுதியில் நீண்ட காலமாக மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தற்போது ஊர் மக்கள் மற்றும் கோவில் கமிட்டி சார்பில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவிலுக்குச் சொந்தமான, கோவிலுக்குப் பின்புறம் உள்ள 2.5 சென்ட் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது. அப்பகுதியைச் சேர்ந்த லீலாவதி என்பவர் தனது இடத்துடன் சேர்த்து கோவில் நிலத்தையும் ெஷட் அமைத்து வாடகைக்கு விட்டிருந்தார்.
இது குறித்து வருவாய் துறையினருக்கு உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் ஆய்வு செய்த வருவாய் துறையினர், கோவில் நிலத்தைக் கண்டறிந்து, ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கினர். உரிய கால அவகாசம் வழங்கியும், ஆக்கிரமிப்பு அகற்றவில்லை.
இதையடுத்து வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். துணை தாசில்தார் பரமேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் சுப்புராஜ், வி.ஏ.ஓ., தேவராஜன் ஆகியோர் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.கோவில் நிலத்திலிருந்த ஆக்கிரமிப்பு இடித்து அகற்றி, கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த இடம் 30 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 50 லட்சம் ரூபாயாகும். ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் பாதுகாப்பு செய்து, அறிவிப்பு பலகை வைக்கப்படும்,’’ என்றனர்.