திருப்பூரில் தொடர்ந்து 3வது நாளாக மழை: இதமான வானிலையால் மக்கள் நிம்மதி
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக இன்று மாலையும் மழை பெய்து வருகிறது.;
கடந்த சில வாரங்களாக, திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. மே மாத அக்னி நட்சத்திர வெயிலுக்கு இணையாக நிலவிய வெப்பத்தால், மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனிடையே, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கடந்த இரு தினங்களாக, திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இரு தினங்களாக வெயில் இல்லாமல் மேகமூட்டமாக இருந்து வந்தது. இன்றும் அதேபோன்ற வானிலை நிலவியது. இன்று மாலை, திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து காற்றுடன் மிதமான மழை பெய்தது.
தொடர்ந்து 3 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.