திருப்பூரில் நூல்விலை மீண்டும் கிலோவுக்கு ரூ. 5 உயர்வு; தொழில்துறை அதிர்ச்சி

Tirupur News- திருப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதால், பனியன் தொழில் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-09-16 13:57 GMT

Tirupur News- திருப்பூரில் நூல் விலை, மீண்டும் கிலோவுக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today-  திருப்பூர் பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தனர். இதில் 10 முதல் 30-வது கோம்டு வரை உள்ள நூல்கள் கிலோவுக்கு ரூ.7ம், 34 -வது கோம்டு மற்றும் அதற்கு மேல் கிலோ ரூ.5ம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாதத்தில் 2-வது முறையாக இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ. 5 உயர்ந்தது. அதன்படி தற்போது ஒரு கிலோவுக்கு 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.187-க்கும், 16-ம் நம்பர் ரூ.197-க்கும், 20-வது நம்பர் ரூ.255-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.247-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரை பொருத்தவரை பனியன் தொழில் துறையினர், பல்வேறு நெருக்கடிகளால் தொழிலில் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மின் கட்டண உயர்வு பலத்த பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வரும் 25ம் தேதி, தொழில் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றிவைத்து, ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும், நேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழில் துறையினர் சார்பில் தமிழக முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது நூல் விலை உயர்வும் திருப்பூர் தொழில் துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, மாதம் ஒருமுறை மட்டுமே நூல் விலையேற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மாதம் இருமுறை நூல் விலை உயர்த்தப்படுவதும் தொழில் துறையினரை, கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

Tags:    

Similar News