திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் தீவிர சோதனை
Tirupur News- கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
Tirupur News,Tirupur News Today- கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் பலி மற்றும் காயம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மாலை ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் துணை உதவி ஆய்வாளர் லிஜோ மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் ரயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று 2-வது நாளாக திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் ரயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் பனியன் தொழில் நகரமாக இருப்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மிக முக்கியமான பகுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி திருப்பூர் வழியாக கோவை, கேரளா மற்றும் ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் திருப்பூரில் தங்கி பனியன் தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அவர்களும் வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களின் அடிக்கடி சென்று வருகின்றனர்.
இந்நிலையில், போலீசார் நகரின் பாதுகாப்பு கருதி, இந்த சோதனையில் தீவிரம் காட்டி 2வது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.