அவிநாசி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட மக்கள்

Tirupur News- அவிநாசியை அடுத்துள்ள சேவூர் கிராமம் பந்தம்பாளையத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி, கலெக்டரிடம் மக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-12-07 17:08 GMT

Tirupur News- சேவூர் கிராமம் பந்தம்பாளையத்தில் மதுக்கடையை அகற்ற மக்கள் மனு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூர் பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூர் கிராமத்திற்கு உட்பட்ட பந்தம்பாளையத்தில் ஒரு தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கூடம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவருக்கும் இடையூறாக உள்ளது. ஏற்கனவே இந்த மதுபான கூடம் அமைவதற்கு முன்பு வேட்டுவபாளையம், முறியாண்டம்பாளையம், சேவூர் ஆகிய 3 ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில் இந்த மதுபான கூடம் அமைய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

இதையடுத்து மதுபான கூடத்தை எதிர்த்து பொதுமக்கள் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் 3 முறை மனு அளித்துள்ளோம். அதிகாரிகளிடமும் மனு அளித்து உள்ளோம். இதையும் மீறி அந்த மதுபான கூட நிர்வாகத்தினர், வேறொரு மாவட்டத்தில் அனுமதி உரிமம் பெற்று இங்கு மதுபான கூடத்தை அமைத்தனர். இதனால் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முதல் முறையாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தாசில்தார் மற்றும் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் அந்த மதுபான கூடம் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றோம்.

பின்னர் சுமார் ஒரு வாரம் பூட்டி இருந்த அந்த மதுபான கூடம் மீண்டும் திறக்கப்பட்டது. இதையறிந்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போதும் பொதுமக்கள் முன்னிலையில் அரசு அதிகாரிகள் இந்த கடை இனி இங்கே திறக்கப்படாது என்று மீண்டும் உறுதி அளித்தனர். இதனால் கலைந்து சென்றோம்.

இந்நிலையில் தற்போது அந்த மதுபான கூட நிர்வாகிகள் மீண்டும் மதுபான கூடத்தை திறந்து செயல்படுத்துவோம் என்று கூறி வருகிறார்கள். அப்படி மீண்டும் திறக்கப்பட்டால் அது பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே விவசாயிகளின் நலன் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த மதுபான கூடத்தை இங்கிருந்து முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News