திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

Tirupur News- திருப்பூர் அருகே 23 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால், ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-11-17 10:39 GMT

Tirupur News- திருப்பூர் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட மக்களால், போக்குவரத்து பாதித்தது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துபாளையம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு கடந்த 23 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பூர் ஊத்துக்குளி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. வாகன நெரிசலில் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த மறியல் போராட்டத்தால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.

தகவல் கிடைத்ததும் மறியல் நடந்த இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் ஊத்துக்குளி போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர் அந்த இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை நேரத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர், தொழிலாளர்கள்  வேலைக்கு செல்லும் நேரத்தில் இந்த மறியல் போராட்டம், பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News