முடிஞ்சது லீவு - திருப்பூரில் வரும் 20ம் தேதி பனியன் நிறுவனங்கள் திறப்பு

Tirupur News-தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு வரும் திங்கட்கிழமை 20ம் தேதி பனியன் நிறுவனங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-11-17 12:01 GMT

Tirupur News- திருப்பூரில் வரும் 20ம் தேதி முதல் பனியன் நிறுவனங்களை திறக்க முடிவு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதையே வெளி மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த 10-ம் தேதியே புறப்பட்டு சென்றனர். பின்னலாடை நிறுவனங்களில் வழக்கம் போல் அவசரகதியில் முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இந்த முறை இல்லை. இயக்கம் சீராக இருப்பதால் நிறுவனங்களும் தாராளமாக, 10 நாட்கள் வரை விடுமுறை அளித்துள்ளன. வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊர் சென்றுள்ளனர். இருப்பினும் தீபாவளி விடுமுறை முடிந்து நிறுவனங்கள் இயக்கத்துக்கு வருகின்றன.

குறிப்பாக நிர்வாகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வரத்தொடங்கி உள்ளனர். கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு சில நாட்களுக்கு, வழக்கமான பணிகளை செய்ய நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். விடுமுறையில் சென்றவர்கள் 18, 19 ஆகிய தேதிகளில் திருப்பூர் திரும்ப உள்ளனர். அதன்படி, வருகிற 20-ம் தேதி முதல் பின்னலாடை நிறுவனங்கள் இயல்பான இயக்கத்தை துவக்கும். ஜாப் ஒர்க் நிறுவனங்கள், அதற்கு பிறகே தங்கள் இயக்கத்தை தொடங்க முடிவு செய்து உள்ளனர்.

வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பு சில வாரங்களும், தீபாவளிக்கு பின்பு சில வாரங்களும் பனியன் நிறுவனங்களில் ஆர்டர்கள் அதிகளவில் இருக்காது. அதன்காரணமாக, பெரும்பாலான நிறுவனங்களில் வேலை மந்தமாகவே காணப்படும் என்பதால், நவம்பர், டிசம்பர் மாதங்களில் உற்பத்தியின்  வேகம் குறைந்தே காணப்படும். டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் ஆர்டர்கள் அதிகரிக்க துவங்கி, ஜனவரி மாதத்தில் உற்பத்தி வேகம் எடுக்கும் என, பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

Tags:    

Similar News