வார்டுகளில் கொசு மருந்து அடிப்பதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை, திருப்பூா் மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
Tirupur News-வார்டுகளில் கொசு மருந்து அடிப்பதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை, திருப்பூா் மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் புகார் எழுப்பினார்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் கிரியப்பனவா், துணை மேயா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பேசினா்.
கோமதி (திமுக): வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். 60-வது வாா்டில் போதிய அளவில் தெருவிளக்குகளைப் பொருத்தி குற்றச் சம்பங்களைத் தடுக்க வேண்டும்.
கண்ணப்பன்(அதிமுக): வாா்டுகளில் கொசு மருந்து அடிப்பதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. இனி வரும் நாள்களில் அதனைக் கண்காணித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
ரவிசந்திரன் (இ.கம்யூ): மாநகராட்சி கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்த வேண்டும். முன்பு 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வந்தது. தற்போது 6 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வருகிறது. இதனை சீராக்க வேண்டும்.
நாகராஜ் (மதிமுக): திருப்பூரில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கொசு மருந்து அடிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதுடன், முறைப்படுத்த வேண்டும். மழைநீா் வடிகால் பணிகளை பாராட்டுக்குரிய முறையில் செய்ததைப் போல இதனையும் செய்ய வேண்டும்.
கூட்டத்தில் மேயா் தினேஷ்குமாா் பேசியதாவது, ஒப்பந்ததாரருக்கு மாா்ச் வரை நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சாலைகள், தெருவிளக்கு பிரச்னைகள், சுகாதார பிரச்னைகளை கவனத்தில் கொண்டு ரூ. 15 கோடி பொதுநிதி பெற்றுள்ளோம். அதாவது ஒரு வாா்டுக்கு ரூ. 20 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 2024-25-ம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீட்டுப் பணிகளைத் தொடங்கி விட்டோம்.
அடுத்த நிதி ஆண்டில் திருப்பூா் மாநகராட்சியின் பல்வேறு சாலைகளுக்கு உரிய நிதியைப் பெற்று, சாலைப் பணிகளை தொடங்கிவிடுவோம். தமிழக அரசின் மக்களோடு முதல்வா் திட்டத்தை திருப்பூா் மாநகரில் 20 இடங்களில் டிசம்பா் 8-ம் தேதி தொடங்க உள்ளோம்.
வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகள் விரைவில் களையப்படும். தெருவிளக்குகள் தொடா்பாக மண்டல வாரியாக கூட்டம் நடத்தப்பட்டு, அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தேவையான இடங்களில் தெருவிளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.