இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் காரணமாக பனியன் ஆர்டர் கிடைப்பதில் சிக்கல் - ஏற்றுமதியாளர்கள் கவலை
Tirupur News- இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடப்பதால், பனியன் ஆர்டர்களை பெறுவதில் தாமதம் ஏற்படும் என்பதால், ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Tirupur News,Tirupur News Today- இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பல்வேறு நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை, அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்குள்ள பெரிய வர்த்தகர்கள், உலக நாடுகளில் உள்ள சில்லரை வர்த்தகர்களுக்கு, ஆடைகளை விற்கின்றனர்.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், சங்கிலி தொடர் போல பல்வேறு நாடுகளையும் ஒருங்கிணைக்கிறது. இதன்காரணமாக, சங்கிலி தொடரில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் தாக்கம், தொடர்புள்ள நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது.
கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அடுத்துவந்த ஆண்டில் மீண்டும் சூடுபிடித்தது. இருப்பினும், ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே துவங்கிய போரால், திருப்பூருக்கு புதிய ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பது அரிதாக மாறியுள்ளது.
புதிய வளர்ச்சி இல்லாவிட்டாலும், வழக்கமான ஆர்டர்களை பெற முடியாமல், ஏற்றுமதியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடரும் போராட்டத்தால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும், நூற்பாலைகள் மற்றும் தொடர்புடைய ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எப்படியும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடங்கிய போர் திருப்பூர் ஏற்றுமதியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.இஸ்ரேல் போர் சூழல் காரணமாக நேரடி பாதிப்பு திருப்பூருக்கு இருக்காது. இருப்பினும் சங்கிலி தொடராக உள்ள வர்த்தக தொடர்புகள் பாதிக்கும். இதன்காரணமாக, மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் இழுபறி ஏற்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.