திருப்பூா் மாவட்டத்தில் இருந்து, சென்னைக்கு 39 வாகனங்களில் சென்ற அத்தியாவசியப் பொருள்கள்
Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் இருந்து 39 வாகனங்கள் மூலமாக அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் இருந்து 39 வாகனங்கள் மூலமாக அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் மிக்ஜம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும் தமிழக அரசு போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நாள்தோறும் அத்தியாவசியப் பொருள்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பும் பணிகளை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது: திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே குடிநீா், அரிசி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் பவுடா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் 24 வாகனங்களில் கடந்த சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
இதையடுத்து, அரிசி, சமையல் எண்ணெய், பெட்ஷீட், ஆடைகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் உள்ளிட்ட பொருள்கள் 15 வாகனங்கள் மூலமாக ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தற்போது வரை 39 வாகனங்கள் மூலமாக புயல் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றாா்.