திருப்பூரில் பூ மார்க்கெட் கடைகள் இடமாற்றம்; பொதுமக்கள் அதிருப்தி

Tirupur News- திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த பூக்கடைகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டன.

Update: 2023-09-14 13:28 GMT

Tirupur News- திருப்பூரில் பூ மார்க்கெட் கடைகள் இடமாற்றம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த பூக்கடைகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டன. அங்கிருந்த வியாபாரிகள் வேறு இடங்களுக்கு சென்றதால், மக்கள் அதிருப்தியடைந்தனர்.

திருப்பூர் பூ மார்க்கெட் வீதியில் செயல்பட்டு வந்த மாநகராட்சியின் பழைய பூ மார்க்கெட் கட்டிடமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது. கட்டுமான பணி காரணமாக அங்கிருந்த பூக்கடைகள் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டது. பின்னர் 85 கடைகளுடன் அமைக்கப்பட்ட புதிய மார்க்கெட், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. ஆனால் அப்போது காட்டன் மார்க்கெட்டில் இருந்த 80-க்கும் மேற்பட்ட கடைகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகள் மட்டுமே புதிய மார்க்கெட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

 மீதம் இருந்த பெரும்பாலான பூக்கடைகள், காட்டன் மார்க்கெட்டிலேயே செயல்பாட்டு வந்தன. புதிய மார்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள கடைகளின் வாடகை அதிகமாக இருப்பதாகவும், கடைகள் மிகவும் சிறியதாக இருப்பதாகவும் கூறி பெரும்பாலான வியாபாரிகள் அங்கு செல்லாமல் இருந்தனர். காட்டன் மார்க்கெட்டில் செயல்பட்ட கடைகள், தொடர்ந்து இங்கேயே செயல்படும் என்றும், பூ வியாபாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களும், வியாபாரிகளும் காட்டன் மார்க்கெட் பூக்கடைகளுக்கு சென்று, தேவையான பூக்களை வாங்கினர்.

இந்நிலையில், மாநகராட்சி மார்க்கெட்டின் குத்தகைதாரர் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி வழக்கு தொடர்ந்ததையடுத்து காட்டன் மார்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம் முடியும் நிலையில் நேற்று காட்டன் மார்க்கெட்டில் இருந்த கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

ஆனால், இப்போதும் காட்டன் மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் அனைவரும் மாநகராட்சி பூ மார்க்கெட்டிற்கு செல்லவில்லை. இதில் ஒரு தரப்பினர் மாநகராட்சி மார்க்கெட்டிற்கும், மற்றொரு தரப்பு வியாபாரிகள் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியில் தனியார் இடத்தில் அமைந்துள்ள கடைகளுக்கும் சென்றனர். 

இது குறித்து மாநகராட்சி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் கேட்ட போது,  இங்குள்ள 85 கடைகளில் தற்போது 75-க்கும் மேற்பட்ட கடைகள் நிரம்பி விட்டன என்றனர். பல்லடம் ரோட்டில் உள்ள வியாபாரிகளிடம் கேட்ட போது, சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு வந்துள்ளனர் மேலும் வருவார்கள், என்றனர்.

தற்போது வியாபாரிகள் இரு பக்கமும் கடைகள் அமைத்திருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், பூக்கள் வாங்கச் செல்லும் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு, போக்குவரத்து சிரமங்களும் ஏற்படுகிறது.

Tags:    

Similar News