திருப்பூர் மீன் மார்க்கெட்டில், நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்; விலை எகிறியும் விற்பனை ‘ஜோர்’
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மீன் மார்க்கெட்டில், மக்கள் கூட்டம் இன்று காலை அலைமோதியது. சில மீன்களின் விலை அதிகரித்திருந்த நிலையிலும், விற்பனை அமோகமாக காணப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் பல்லடம் ரோட்டில், தென்னம்பாளையம் உழவர் சந்தையை அடுத்து, மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மீன்கள், டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக மார்க்கெட்டில் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதேபோல் ஞாயிறு விடுமுறை தினமான இன்றும் அதிகாலை முதல் மதியம் வரை, மீன்களை வாங்க வந்த மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கடல் மீன், அணை மீன் என மொத்தம் 48 டன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாக, மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளமீன் ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. நண்டு ரூ.300, நெத்திலி ரூ.220, அயிலை ரூ.200, மத்தி ரூ.200, சங்கரா ரூ.300, நகரை ரூ.350, கருப்பு பாறை ரூ.400, வெள்ளை பாறை ரூ.500, வாவல் சிறியது ரூ.300, கிழங்கான் ரூ.170, ஊழி ரூ.280, இறால் ரூ.500, முரல் ரூ.400, சாலமன் ரூ.550 ஆகிய விலைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதேபோல் அணை மீன் வகையை சேர்ந்த கட்லா ரூ.160, ரோகு ரூ.180, விரால் ரூ.450, ஜிலேபி மீன் ரூ.100, பாறை ரூ.120, நெய் மீன் ரூ.100 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. ஒரு சில மீன்களின் விலை அதிகமாக இருந்த போதும் விற்பனை மும்முரமாக இருந்தது.
திருப்பூரை பொருத்த வரை, பல மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அதிகளவில் காணப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, வடமாநிலத் தொழிலாளர்களும், திருப்பூர்வாசிகளாக மாறிவிட்ட நிலையில், மீன்களை விரும்பி சாப்பிடும் அசைவப் பிரியர்கள் பலமடங்கு அதிகரித்து விட்டனர். மேலும், ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகமுள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் ஆட்டிறைச்சியை தவிர்க்கும் நிலையில், அவர்களது அடுத்த விருப்பமாக மீன் உள்ளது. மேலும், கோழி இறைச்சி விலையும் அதிகமாக இருப்பதால், மீன்களை வாங்க பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, திருப்பூர் மீன் மார்க்கெட்டில் ஞாயிறு தினங்களில், மீன் வாங்க வரும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
உழவர் சந்தை, காய்கறி சந்தை பகுதிக்கு பின்புறம் மீன் மார்க்கெட் அமைந்துள்ளதால் காய்கறி சந்தை, உழவர் சந்தை வழியாக பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் மீன் மார்க்கெட் பகுதிக்கு செல்வதால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. காய்கறிகளை லோடு இறக்க கொண்டு வரும் வாகனங்களும், அதிகாலை நேரங்களில் வருவதால் நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் காய்கறி வியாபாரிகளும், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.