பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி: பொள்ளாச்சி ஜெயராமன்
இந்தியாவின் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்து வருவதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.;
போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் நேற்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற் றஆர்ப்பாட்டத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் இன்னாள் எம்எல்ஏக்கள்,எம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 1000த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தின் போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. ஏற்கனவே 2 ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தினர். இப்போது போதை பொருள் விற்பனையால் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தி.மு.க.வின் அயலக அணி இணைச்செயலாளர் ஒருவர் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து தமிழக இளைஞர்களுக்கு சப்ளை செய்துள்ளார். 3 ஆண்டு காலத்தில் பல ஆயிரம் கோடி போதை பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்துள்ளார்கள்.
இதேபோல் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. இதனை தடுக்க முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தவறிவிட்டார். இன்று திருப்பூர் மாநகராட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. 50 சதவீத கமிஷன் கேட்பதால் எந்த ஒரு பணி செய்வதற்கும் ஒப்பந்ததாரர்கள் முன் வரவில்லை.
தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருவதோடு மக்களின் பிரச்சினைகளை சட்டசபையில் எடுத்து பேசி வருகிறார். ஆனால் அதற்கு தி.மு.க. உரிய பதில் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்து வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் வெகு விரைவில் வரப்போகிறது.
இதில் அ.தி.மு.க. சார்பில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலம் முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களை எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என நினைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இவர் அவர் பேசினார்.