திருப்பூரில் பின்னலாடை தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு வழங்க கோரிக்கை

Tirupur News- தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு, பின்னலாடை தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-11-17 12:24 GMT

Tirupur News- பின்னலாடை தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு வழங்க கோரிக்கை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு, பின்னலாடை தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு முழுமையாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டீ), பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), தென்னிந்திய இறக்குமதி எந்திர துணி உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா), திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (டெக்மா) உள்ளிட்ட தொழில் அமைப்புகள் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., அண்ணா தொழிற்சங்கம், எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எம்.எல்.எப்., பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்று, இவற்றின் பிரதிநிதிகள் சம்பள ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கடந்த 2021 செப்டம்பர் மாதம் உருவான ஒப்பந்தப்படி, 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறை சம்பளத்தில் இருந்து 4 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி மற்றும் 4 சதவீத சம்பள உயர்வுடன் புதிய சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களும் அந்தந்த நிறுவனங்களில் சம்பளத்தை கேட்டுப்பெற வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தீபாவளி பண்டிகை ஆர்டர் ஓரளவுக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும் 10 நாட்கள் வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போனஸ் கணக்கீடு செய்வதற்காக புதிய சம்பள உயர்வு இடையில் வழங்கப்படாமல் இருந்தது. அதன்படி இவ்வாரத்தில் இருந்து புதிய சம்பள உயர்வை கணக்கிட்டு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சி.ஐ.டி.யு., பனியன் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சம்பத் கூறியதாவது,

தொழிற்சங்கம் இயங்கும் நிறுவனங்களில் ஒப்பந்தப்படி கடந்த மாதமே 4 சதவீத சம்பள உயர்வு கிடைத்துவிட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் தீபாவளிக்கு பிறகு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். எப்படியிருந்தாலும் ஒப்பந்தம் செய்தபடி 4 சதவீத சம்பள உயர்வு வழங்கியாக வேண்டும். எனவே கூட்டுக்கமிட்டி சார்பில் அனைத்து தொழிலாளருக்கும், 4 சதவீத சம்பள உயர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

சம்பள ஒப்பந்தப்படி கட்டிங், டெய்லர், அயர்ன், பேக்கிங், சிங்கர், நிட்டிங் மெஷின் தொழிலாளருக்கு ஷிப்டுக்கு 512.66 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். செக்கிங் பணியாளருக்கு 391.08 ரூபாய், லேபிள் தொழிலாளிக்கு 375.89 ரூபாய், கை மடித்தல் பணிக்கு 371.95 ரூபாய், டேமேஜ் தொழிலாளிக்கு 343.67 ரூபாய், அடுக்கி கட்டும் தொழிலாளிக்கு 312.34 ரூபாய் அளவுக்கும், லோக்கல் மெஷின் பிரிவுக்கு 493.98 ரூபாயும் சம்பளம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News