திருப்பூரில் தொடரும் மின்தடையால் மக்கள் அவதி
திருப்பூர் தட்டான் தோட்டம் பகுதியில், அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.;
திருப்பூர் தட்டான்தோட்டம் பகுதியில், மணிக்கணக்கில் நீடிக்கும் மின்தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருப்பூர் பல்லடம் ரோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், தட்டான்தோட்டம் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில், ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பனியன் நிறுவனங்களும் இப்பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில், அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி செய்யப்படுகிறது. காலை, மதியம், மாலை மற்றும் இரவு நேரங்களில் மணிக்கணக்கில் மின்தடை செய்யப்படுகிறது. சிலவேளைகளில், இரண்டு முதல் நான்குமணி நேரம் வரை, மின்வினியோகம் தடையாகிறது. அதிகாலை வேளைகளில் செய்யப்படும் மின்தடை, மதியம் வரை நீடிக்கிறது.
மின்தடையால், காலை நேரங்களில் பெண்கள் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில், பாதிப்பு ஏற்படுகிறது. தொழில் நிறுவனங்களில், உற்பத்தி பாதிக்கிறது. டீசல் விலை காரணமாக, ஜெனரேட்டர் பயன்படுத்தாத சிறு யூனிட்டுகளில், தொழிலாளர் பணிவாய்ப்பை இழக்கின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் உள்ள சில நிறுவனங்களில், ஜெனரேட்டர் பயன்படுத்துவதால், இரைச்சல் சத்தம் பலரையும் வெறுப்படைய செய்கிறது.இரவு நேரங்களில், கொசு தொல்லையால் துாங்க முடியாமல், பலரும் அவதிப்படுகின்றனர்.
தட்டான் தோட்டம் பகுதிக்கு, தடையின்றி மின்சாரம் கிடைக்க, மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மக்களின் கோரிக்கையாக உள்ளது.