ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் கைது

Tirupur News- திருப்பூரில், ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி இளநிலைப் பொறியாளரை, போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-10-20 09:23 GMT

Tirupur News- லஞ்சம் வாங்கிய மாநகராட்சி இளநிலை பொறியாளர் கைது ( மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- குழாய் பதிக்கும் பணிக்காக ஒப்பந்ததாரரிடம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற திருப்பூா் மாநகராட்சி இளநிலைப் பொறியாளரை போலீசார் நேற்று கைது செய்தனா்.

திருப்பூா், பெரியாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (56). மாநகராட்சி ஒப்பந்ததாரா். இவா், நெருப்பெரிச்சல் பகுதியில் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தாா். இதற்கான ரசீதில் கையொப்பமிட திருப்பூா் மாநகராட்சி 2-ம் மண்டல இளநிலைப் பொறியாளா் சந்திரசேகா் (53) ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதைக் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரா், திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போலீசார் அறிவுரைப்படி, திருப்பூா் குமாா் நகா் குடிநீா்த் தொட்டி வளாகத்தில் உள்ள மாநகராட்சிப் பிரிவு அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளா் சந்திரசேகரை நேற்று சந்தித்து பழனிவேல் ரூ. 25 ஆயிரம் கொடுத்தாா். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் சசிலேகா தலைமையிலான போலீசார் சந்திரசேகரை கையும் களவுமாகப் பிடித்தனா். இதையடுத்து அவரிடம் பல மணிநேரம் விசாரணையில் ஈடுபட்டனா். தொடா்ந்து சந்திரசேகரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனா்.

அதிகாரிகள் கவனத்துக்கு

திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் மட்டுமின்றி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள். பத்திரப் பதிவு அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் இதுபோன்று லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளதாகவும், ஊழல், முறைகேடு நடவடிக்கைகளில்  துறை சார்ந்த அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. பொதுமக்கள் சார்பில், அரசியல் கட்சிகள் சார்பிலும் அடிக்கடி குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர கண்காணிப்பு, சோதனைகளை அடிக்கடி நடத்த முன்வர வேண்டும். குறிப்பாக, அதிக சொத்து சேர்த்துள்ள அரசுத்துறை உயரதிகாரிகள் குறித்தும், விசாரணை நடத்தி சோதனைகளை நடத்தவும் முன்வர வேண்டும் என்பதே, மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Tags:    

Similar News