திருப்பூரில் அரசுப்பள்ளிகளில் 12 நாட்களில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சமா? - கிளம்பியது புது சர்ச்சை

Tirupur News- திருப்பூரில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கிய, 12 நாட்களில், ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என, கல்வித்துறை தெரிவித்தது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Update: 2024-03-14 18:04 GMT

Tirupur News- அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர் சேர்க்கை குறித்த சர்ச்சை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கிய, 12 நாட்களில், ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில், 38 ஆயிரம் அரசு பள்ளிகள், 8 ஆயிம் உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறைக்கு முன்னரே, பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து, அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது. அரசு பள்ளிகளில் வழங்கப்படும் இலவச கல்வி, ஸ்மார்ட் கிளாஸ், ஆய்வகம், காலை, மதிய உணவுத்திட்டம் உள்ளிட்ட வசதிகளை விளக்கி, மாணவ, மாணவியரை சேர்ப்பதில், ஆசிரியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த முதல் தேதி மாணவர் சேர்க்கை துவங்கிய நிலையில், '12ம் தேதி வரை மாநிலம் முழுக்க, ஒரு லட்சத்தை தாண்டி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்,' என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்களை சேர்ப்பதில் முனைப்புக் காட்டுகின்றனர். பெரும்பாலான நகர்ப்புறங்களில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது கடினமானதாகவே உள்ளது. எனவே, அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள், தற்போது தனியார் பள்ளிகளில் யு.கே.ஜி., படிக்கும் மாணவ, மாணவியரின் விவரத்தை சேகரித்து, மாணவர் சேர்க்கை பட்டியலில் சேர்த்து 'கணக்கு' காண்பித்து வருகின்றனர்.

அத்தகைய மாணவர்கள், அரசுப்பள்ளில் சேர்ந்து பயில்வர்' என, சொல்ல முடியாது. அதே நேரம், நகர்ப்புறங்களை ஒட்டிய ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு பள்ளிகளில் பெற்றோர் பலர், மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். அத்தகைய பள்ளிகளில், தற்போதைய நிலையிலேயே, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் இல்லை.

ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது, பெற்றோரிடம் ஒரு வித தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல பள்ளிகளில் கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கட்டமைப்புகள், பெற்றோரை திருப்திப்படுத்தும் வகையில் இல்லை; இதுவும், மாணவர் சேர்க்கையை பாதிக்கும். இதுபோன்ற விஷயங்களை, அரசு கவனத்தில் கொண்டு செயல்பட்டால், மாணவர் சேர்க்கையை தக்க வைக்க முடியும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News