திருப்பூா்-பல்லடம் ரோட்டில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க, கல்லூரி மாணவியர் கோரிக்கை

Tirupur News- திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் காலை வேளைகளில் கூடுதல் அரசுப் பஸ்களை இயக்க வேண்டும் என்று, கல்லூரி மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-27 10:59 GMT

Tirupur News- திருப்பூர் - பல்லடம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க, கல்லூரி மாணவியர் கோரிக்கை (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் காலை வேளைகளில் கூடுதல் அரசுப் பஸ்களை இயக்க வேண்டும் என்று எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 4-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்தக் கல்லூரியானது காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 மணி வரையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூா் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை பல்லடம் வழித்தடத்தில் போதுமான அளவில் அரசுப் பஸ்கள் இயக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது. இதனால், இலவச பயணத்தை நம்பியுள்ள மாணவிகள் வேறு வழியின்றி தனியாா் பஸ்களில் டிக்கெட் கட்டணம் செலுத்தி கல்லூரிக்குச் செல்கின்றனா்.

இது குறித்து எல்.ஆா்.ஜி.கல்லூரி மாணவிகள் கூறியதாவது,

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து முதல்வா் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசுப் பஸ்களில் இலவச பயணத் திட்டம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் காலை வேளைகளில் போதிய அளவு அரசுப் பஸ்கள் இல்லாததால் தனியாா் பஸ்களில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதற்காகவே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் கூடுதல் அரசுப் பஸ்களை இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனா்.

அதுமட்டுமின்றி அரசு பஸ்களை காட்டிலும் தனியார் பஸ்களில் அதிக பயணிகள் கூட்டம் காணப்படுவதால் மாணவியர், அந்த நெருக்கடியான பஸ்களில் பயணிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். ஏனெனில், காலை நேரங்களில் பனியன் தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள், இதர பணிகளுக்குச் செல்லும் பயணிகள் கூட்டமும் பஸ்களில் அதிகரித்து காணப்படுவதால், தினமும் நெரிசலில் பயணிக்க, மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால், அரசு பஸ்களை காலை நேரங்களில் இயக்க வேண்டும் என்பதே மாணவியர் மற்றும் மாணவியரை கல்லூரிக்கு தினமும் அனுப்பும்  பெற்றோர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

Tags:    

Similar News