பனியன் வியாபாரியின் உயிரை பறித்தது ‘செல்போன்’ - கொலை செய்த 4 பேர் கைது

திருப்பூரில் தவற விட்ட செல்போனால், பனியன் வியாபாரியின் உயிர் பறிபோனது. இதில், கொலை செய்த 4 பேரை, போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-02-24 11:36 GMT

திருப்பூரில் பனியன் வியாபாரியை, கல்லால் தாக்கி கொலை செய்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். (கோப்பு படம்)

திருப்பூர் வலையங்காடு பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 47). இவர் செகன்ட்ஸ் பனியன் வியாபாரி. இவர் ராயபுரம் குமரப்பபுரம் மேல்நிலைத்தொட்டி அருகே பைக்குடன் கீழே விழுந்து, தலையில் பலத்த காயத்துடன் கிடந்தார். அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்,  திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாக மருத்துவமனையில் முதலில் தகவல் தெரிவித்துள்ளனர். ஹக்கீமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இறந்தார். பின்னர் திருப்பூர் வடக்கு போலீசார் விபத்தில் சிக்கி ஹக்கீம் உயிரிழந்ததாக விசாரணையை நடத்தினர்.

விபத்து நடந்ததாக கருதப்படும் அந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போது, கற்களில் ரத்தக்கறை படிந்து இருந்தது. அதன்பிறகே ஹக்கீமை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் தாக்கியதும், இதில் ஹக்கீம் இறந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் நவீன்குமார்(24), அஜித் (24),கண்ணன் (29), அஜ்மீர் (21) ஆகிய 4 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர். ஹக்கீம் வழக்கை சந்தேக மரணம் என விசாரித்து வந்த நிலையில், கல்லால் தாக்கியது உறுதியானதால் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடைேய ஹக்கீமை கொலை செய்ததற்கான காரணம் குறித்து கைதான 4பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. நவீன்குமார், அஜித், கண்ணன், அஜ்மீர் ஆகியோர் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளது. சம்பவத்தன்று திருப்பூர் மரக்கடை பகுதியில் ஒருவரிடம் 4பேரும் செல்போனை பறித்து சென்றுள்ளனர். அப்போது நவீன்குமார் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்தது. அதனை ஹக்கீம் எடுத்து வைத்திருந்தார்.

இதையடுத்து நவீன்குமார் அந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்த போது ஹக்கீம், செல்போனை தான் எடுத்து வைத்திருப்பதாகவும், அதனை கொடுக்க வேண்டுமானால் தனக்கு பணம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இதையடுத்து நவீன்குமார் மற்றும் அவரதுநண்பர்கள் 3பேரும் திருப்பூர் ராயபுரத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஹக்கீம் ராயபுரத்திற்கு சென்று நவீன்குமாரை சந்தித்து செல்போனை கொடுத்து செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு நவீன்குமார் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார் மற்றும் 3பேரும் சேர்ந்து, கல்லால் ஹக்கீம் தலையில் தாக்கியுள்ளனர். இதில் அவர் இறந்தார். இதையடுத்து 4பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

தற்போது போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டனர். செல்போன் மற்றும் பணப்பிரச்னையில் பனியன் வியாபாரியை வழிப்பறி கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவற விட்ட செல்போனை, திரும்ப வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், பனியன் வியாபாரி கொலை செய்யப்பட்டுள்ளார். தவற விட்ட மொபைல் போன், அவரது உயிரை பறித்திருக்கிறது.

Similar News