நெருங்கும் கார்த்திகை தீபத்திருவிழா; திருப்பூரில் அகல் விளக்குகள் விற்பனை ஜோர்
Tirupur News- கார்த்திகை தீபத்திருவிழா வரும் 26ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், திருப்பூரில் அகல்விளக்கு விற்பனை அதிகரித்துள்ளது.
Tirupur News,Tirupur News Today- கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதற்காக கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும். வீடுகள், கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்களிலும் அகல் விளக்கு உள்ளிட்ட விளக்குகளில் தீபம் ஏற்றி அனைவரும் வழிபாடு செய்வர்.
அவ்வகையில் வீடுகளில் ஏராளமான அகல் விளக்குகளில் தீபம் வைத்து வழிபடுவர். இதற்காக, அகல் விளக்குகள் விற்பனை திருப்பூர் பகுதியில் தற்போது துவங்கியுள்ளது. பொள்ளாச்சி, பொங்கலூர் ஆகிய பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மண்ணால் ஆன அகல் விளக்குகள் பல்வேறு அளவுகளில் தற்போது திருப்பூர் பகுதி கடைகளில் விற்பனையாகிறது.திருப்பூரில் உள்ள நிரந்தர மண் பாண்டம் மற்றும் விளக்கு வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை துவங்கியுள்ளது.
இது மட்டுமின்றி திருவிழாவை முன்னிட்டு விளக்குகள் விற்பனை செய்யும் நடைபாதையோர கடைகள், தள்ளு வண்டி கடைகளிலும் இவற்றின் விற்பனை காணப்படுகிறது. தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்காக இவற்றை கடைகளில் தேர்வு செய்து பலரும் வாங்கி செல்கின்றனர். அகல் விளக்குகள் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் பலரும் கடைகளில் அகல்விளக்குகளை அதிகளவில் வாங்கி விற்பனைக்கு வந்துள்ளனர். இரண்டு விளக்கு ரூ. 10 விலையில் விற்கப்படுகிறது. சில கடைகளில் சற்று பெரிய விளக்குகள் ஒன்று ரூ. 10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.