அமராவதிபாளையம் கால்நடை சந்தை திங்கட்கிழமை செயல்பட அனுமதி; வியாபாரிகள் கோரிக்கை
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் அமராவதிபாளையத்தில் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கால்நடை சந்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் என, கால்நடை வியாபாரிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் அமராவதிபாளையத்தில் பல ஆண்டுகளாக, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி செவ்வாய்கிழமைகளில் கால்நடை சந்தை செயல்படும் என, மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது. இது, தங்களது வியாபாரத்தை கடுமையாக பாதிக்கும். திங்கட்கிழமையே தொடர்ந்து கால்நடை சந்தை நடக்க அனுமதிக்க வேண்டும் என, கால்நடை வியாபாரிகள் தரப்பில் கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து, திருப்பூர் கால்நடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நேற்று, கால்நடை வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
திருப்பூர் மாநகராட்சி அமராவதிபாளையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கால்நடை சந்தை நடந்து வருகிறது. 30 ஆண்டுகளாக திருப்பூரில் திங்கட்கிழமை தோறும் கால்நடை சந்தை நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், திருப்பூர் கால்நடை சந்தை, செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். திருப்பூர் சந்தைக்கு பொள்ளாச்சி, கேரளா, உடுமலை, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர் பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கின்றனர். இந்த சந்தைக்கு 1,000 வியாபாரிகள் வந்து செல்கின்றனர். சராசரியாக 50 லட்சம் ரூபாய்க்கு கால்நடை வியாபாரம் நடந்து வருகிறது.
இந்நிலையில், கால்நடை சந்தையை திடீரென்று செவ்வாய்க்கிழமைக்கு மாற்றம் செய்வதால் வியாபாரம் பாதிக்கப்படும். அதாவது கேரளா வியாபாரிகள் திங்கட்கிழமை திருப்பூர் வந்து கால்நடைகளை வாங்கி சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சியில் நடக்கும் கால்நடை சந்தையில் பங்கேற்று செல்கின்றனர். திருப்பூரில் செவ்வாய்க்கிழமையன்று சந்தையை மாற்றினால் கேரள வியாபாரிகள் வருகை குறைந்து வியாபாரம் கடும்பாதிப்பை சந்திக்கும். திருப்பூரில் தொடர்ந்து திங்கட்கிழமையன்று கால்நடை சந்தை நடத்த உத்தரவிட வேண்டும். செவ்வாய் கிழமை மாற்றப்படும் அறிவிப்பை ரத்து செய்து, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வழக்கம்போல, கால்நடை சந்தை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.