திருப்பூரில் ஒன்றிய வார்டுகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

Tirupur News- திருப்பூரில் ஒன்றிய வார்டுகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Update: 2024-01-31 11:26 GMT

கோப்புப்படம் 

Tirupur News,Tirupur News Today- திருப்பூர்:அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக, திருப்பூர் ஒன்றிய வார்டுகளுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; பணி பட்டியல் விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம், கோர்ட் வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள் தலைமை வகித்தார். தலைவர் தேவிஸ்ரீ, துணை பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) ஜோதிநாத் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலக செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தலைவர், துணை தலைவர் உட்பட ஒன்றிய கவுன்சிலர்கள் எட்டு பேர் பங்கேற்றனர்.

பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) ஜோதிநாத் பேசியதாவது:

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டால், புதிய பணிகள் மேற்கொள்ளமுடியாது. ஒன்றிய கவுன்சிலர் ஒவ்வொருவரும் 10 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மிகவும் அத்தியாவசியமான பணிகளை தேர்வு செய்து, பட்டியல் வழங்கவேண்டும். சாலை, குடிநீர் குழாய் அமைத்தல், ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி அமைத்தல் போன்ற பணிகளை தேர்வு செய்யலாம்.

ஊரக பகுதிகளில் பணிகள் மேற்கொள்வதற்கு, பத்து லட்சம் ரூபாய் போதாது' என்றனர், கவுன்சிலர்கள். அதற்குபதிலளித்து பி.டி.ஓ., பேசுகையில், 'ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஏராளமான நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்குகின்றன. அந்நிறுவனங்களிடம் தொழில் உரிம கட்டணம் வசூலித்தால் வருமானத்தை பெருக்கலாம். பத்து லட்சம் ரூபாய்க்குபதில், ஒவ்வொரு ஒன்றிய கவுன்சிலருக்கும் 25 லட்சம் ரூபாய் ஒதுக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவுன்சிலர் ஜானகி, 'மங்கலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, துாய்மை பணியாளர்கள் வருவதில்லை' என்றார்.

அதற்கு, 'மங்கலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளி. அடுத்த மாதம் முதல் அப்பள்ளியில், துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படும்' என, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பதிலளித்தனர். 

Tags:    

Similar News