மீண்டும் நூல்விலை கிலோவுக்கு ரூ. 5 உயர்வு; பனியன் தொழில்துறை கலக்கம்

Tirupur News,Tirupur News Today-செப்டம்பர் மாதத்திற்கான நூல் விலை, கிலோவுக்கு ரூ.5 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

Update: 2023-09-01 08:04 GMT

Tirupur News,Tirupur News Today- மீண்டும் நூல்விலை உயர்வு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- கடந்த சில மாதங்களாக நூல்விலை உயராமல், அதே பழைய விலையில்  நீடித்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், கிலோவுக்கு ரூ. 10 வரை நூல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் கிலோவுக்கு ரூ. 5 என, நூல்விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது, பனியன் உற்பத்தியாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்துதான், ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிக்கின்றனர். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பிவைக்கப்படும்.

இவ்வாறாக நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த மாதம் 1 -ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் நூல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால் கடந்த 16-ம் தேதி 2-வது கட்டமாக நூற்பாலைகள் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தின. இதனால் மீண்டும் ஏறுமுகத்திற்கு நூல் விலை சென்றதால், தொழில்துறையினர் கலக்கம் அடைந்தனர்.

இதற்கிடையே செப்டம்பர் மாதத்திற்கான நூல் விலை உயருமா அல்லது குறையுமா என, தொழில்துறையினர் நூற்பாலைகள் அறிவிப்பை எதிர்பார்த்தபடி இருந்தனர். அதன்படி இன்று காலை நூற்பாலைகள் நூல் விலை அறிவித்தனர்.

இதில் 10 முதல் 30 கோம்டு வரை உள்ள நூல்கள் கிலோவுக்கு ரூ.7ம், 34 கோம்டு மற்றும் அதற்கு மேல் கிலோ ரூ.5ம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு கிலோவுக்கு 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.182-க்கும், 16-ம் நம்பர் ரூ.192-க்கும், 20-வது நம்பர் ரூ.250-க்கும், 24-வது நம்பர் ரூ.262-க்கும், 30-வது நம்பர் ரூ.272-க்கும், 34-வது நம்பர் ரூ.285-க்கும், 40-வது நம்பர் ரூ.305-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.242-க்கும், 24-வது நம்பர் ரூ.252-க்கும், 30-வது நம்பர் ரூ.262-க்கும், 34-வது நம்பர் ரூ.275-க்கும், 40-வது நம்பர் ரூ.295-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News