திருப்பூர் பின்னலாடை துறை சாதனைகள்; உலகறிய உருவான வாய்ப்பு பாரத் டெக்ஸ்

Tirupur News- திருப்பூர் பின்னலாடை துறை சாதனைகளை, உலகறிய உருவான வாய்ப்பாக, டெல்லியில் பாரத் டெக்ஸ் நடத்த்ப்படுகிறது.

Update: 2024-02-18 16:25 GMT

Tirupur News- பாரத் டெக்ஸ் கண்காட்சி, டெல்லியில் நடக்க உள்ளது. இதில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- டில்லியில் நடைபெற உள்ள 'பாரத் டெக்ஸ்' சர்வதேச ஜவுளிக்கண்காட்சி, திருப்பூர் பின்னலாடை துறையினருக்காக, பிரத்யேக அரங்கு ஒதுக்கப்படுகிறது.

இதன் மூலம், ''திருப்பூரின் செயற்கை நுாலிழை, மறுசுழற்சி தொழில்நுட்ப ஆடை உற்பத்தி திறன்களையும் உலகிற்கு உணர்த்த முடியும்'' என்கின்றனர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்.

டில்லியில் உள்ள 'பாரத் மண்டபம்' வர்த்தக மையத்தில், வரும் 26ல் துவங்கி 29ம் தேதி வரை, 'பாரத் டெக்ஸ் -2024' என்ற சர்வதேச ஜவுளிக்கண்காட்சி நடக்கிறது.

மத்திய ஜவுளித்துறை, ஜவுளி ஏற்றுமதி கவுன்சில்களுடன் இணைந்து நடத்தும் இக்கண்காட்சியில், நம் நாடு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர். இதில், 'திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி' என்ற பெயரில், பிரத்யேக அரங்கு ஒதுக்கப்படுகிறது.

இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், 'திருப்பூர் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று, கண்காட்சியில், திருப்பூருக்கென 'ஹால்-7' ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியா நிட்பேர் (ஐ.கே.எப்.,) அமைப்பு மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துக்கு, இலவச அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வரலாற்றை முழுவதுமாக காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது,'' என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,''கண்காட்சியில்,திருப்பூரின் 60 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பின்னலாடை ஏற்றுமதி அரங்கு, பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரின் பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தி சாதனைகளைத்தான் வர்த்தகர்கள் பெரும்பாலானோர் அறிந்துள்ளனர்.

செயற்கை நுாலிழை ஆடை மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்ப ஆடை உற்பத்தியிலும் வெற்றி கண்டுள்ளதை, இக்கண்காட்சி வாயிலாக உலகம் அறிய செய்து, புதிய வர்த்தக வாய்ப்புகளை ஈர்க்க முடியும்,'' என்றார்.

Tags:    

Similar News