திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் ஆய்வு
Tirupur News- திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் உணவகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
நோயாளிகள் மற்றும் அங்கு இருக்கும் செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதா என ஆய்வு நடந்தது.மூலப்பொருட்களை பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கும் முறை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விவரங்களை கவனித்து வாங்கி உரிய காலத்துக்குள் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது.
மூலப்பொருட்களை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். சமையல் கூடத்தின் அனைத்து பகுதிகளிலும் பூச்சி, தொற்று நடவடிக்கைகள் சீரான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.
பணியாளர்கள் தலைக்கவசம், முகமுகவசம் அணிய வேண்டும். பணியாளர்களுக்கு உரிய மருத்துவ சான்று சரியான கால இடைவெளியில் தடுப்பூசி வழங்கியதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் உரிய கால இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும். குளிர்சாதன பெட்டியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். உணவுப்பொருட்களை தரையில் இருந்து அரை அடி உயரத்தில் பலகையில் முறையாக அடுக்கி வைக்க வேண்டும். உணவுப்பொருட்களை இருப்பு தேதி அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உணவகம், உணவு பாதுகாப்புத்துறையின் உரிய சான்றிதழ் பெற்று செயல்படுகிறது. உணவு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.