திருப்பூரில் 2 ஆயிரம் வீடுகளின் குடிநீர் குழாய்கள் உடைப்பால் பரபரப்பு

Tirupur News- திருப்பூரில் 2 ஆயிரம் வீடுகளின் குடிநீர் குழாய்கள் உடைப்பால், சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-14 17:54 GMT

Tirupur News- குழாய்கள் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் 

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் 2000 வீடுகளின் குடிநீர் குழாய்கள் உடைப்பால் திருப்பூரில் சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News