ஊத்துக்குளி அருகே, ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
Tirupur News. Tirupur News Today- ஊத்துக்குளி அருகே, நண்பர்களுடன் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் இனியவன் (வயது 12). அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் சந்துரு (12). இவன் பொன்னாபுரம் நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் இருவரும் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து வீட்டின் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்க சென்றனர் அங்கு 5 பேரும் ஒன்றாக சேர்ந்து நொய்யல் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இனியவன் மற்றும் சந்துரு ஆகியோர் நீரில் மூழ்கினர். இதைப் பார்த்து மற்ற 3 பேரும் அலறினர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் 2 மாணவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் இனியவன், சந்துரு உடல்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்களின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ''இது போன்ற விபரீத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க விடுமுறை நாட்களில் பெற்றோர் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். நீர்நிலைகளுக்கு தனியாக செல்ல அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவித்தனர்.
தொடரும் சோகம்
இதுபோன்ற ஆறுகள், கிணறுகள், பாறைக்குழிகள், குட்டைகள் போன்றவற்றில் சிறுவர் குளிக்கவும், மீன் பிடிக்கவும் செல்கின்றனர். சரியான பாதுகாப்பின்றி பெரியவர்களின் துணையின்றி சிறுவர்களாக செல்லும்போது, ஆற்றில், குட்டையில் தவறி விழுந்தாலோ அல்லது குளிக்கும்போது நீரில் மூழ்கி விட்டாலோ, அந்த ஆபத்தான நேரத்தில் காப்பாற்ற யாருமின்றி, உயிரிழக்க நேரிடுகிறது. இது, அடிக்கடி நடக்கிறது. சிறுவர்களின் கவனக்குறைவும், பெற்றோர்களின் அலட்சியமுமே இதற்கு முக்கிய காரணமாகிறது. நீர்நிலை பகுதிகளுக்கு செல்லாமல், சிறுவர்களை கட்டுப்படுத்தி, மிரட்டி அதன் ஆபத்தை உணர்த்த தவறி விடுகின்றனர். விளையாடச் செல்வதாக கூறிவிட்டுச் செல்லும் சிறுவர்கள், நீரில் ஆடும் சந்தோஷத்தில் அதில் உயிரை பறிக்கும் ஆபத்து ஒளிந்திருப்பதை மறந்து விடுகின்றனர். இதற்கு முக்கிய தீர்வு, பெரும்பாலும் நீச்சல் பயிற்சி இல்லை. நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கினால், மற்றவர்கள் அந்த நேரத்தில், கைபிடித்து தூக்கி காப்பாற்றி உதவினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும்.
இப்படி சிறுவர்களின் உயிர்பலிகளை தடுக்க, தமிழக அரசு இதற்கு தீர்வு காணும் விதமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுவரை உள்ள சிறுவர்கள், நீர்நிலை பகுதிகளுக்குச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். தடை மீறினால், பெற்றோருக்கு அபராதம் போன்ற கடும் நடவடிக்கை எடுத்தால், உயிர்பலிகளை தடுக்க முடியும்.