திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது
நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியது.;
டாலர் சிட்டி எனப்படும் பின்னலாடை நிறுவனமான திருப்பூர், ஆண்டுக்கு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித் தருகிறது. பின்னலாடை மற்றும் அதன் உப தொழில்களான சாயமேற்றுதல், நிட்டிங், நூல் மில்கள், எம்ப்ராய்டரி உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
கோவிட் பெருந்தொற்று பரவலை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பின்னலாடைத்துறை கடும் சரிவை சந்தித்து, பின்னர் மீண்டு வரத் தொடங்கியது. எனினும்,கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து, புதிய நெருக்கடி உருவானது. நூல் விலை, இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதன் காரணமாக, இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் உள்ளது. எனவே, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் பஞ்சினை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று வலியுறுத்தியும், திருப்பூர் பின்னலாடைத் தொழில் அமைப்புகள், இன்றும் நாளையும் உற்பத்தியை நிறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன.
அதன்படி, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கியது. இதன் காரணமாக நாளொன்றுக்கு ரூ.350 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டமும் நடைபெற உள்ளது.