உலக செவிலியர் தினம்: நெல்லை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்பு
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உறுதிமொழி ஏற்பு.;
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
செவிலியர்கள் தாயின் மறு வடிவம் என்று சொல்வதுண்டு அவர்கள் பொதுமக்களுக்கு ஆற்றி வரும் உன்னத சேவையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் சர்வதேச செவிலியர் தினம் ஆண்டு தோறும் மே.12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், அவர் பிறந்த நாளான மே 12-ந்தேதி உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன்படி ஆண்டு தோறும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக செவிலியர் தினத்தையொட்டி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாரஸ் நைட்டிங்கேல் புகைப்படம் வைக்கப்பட்டு செவிலியர்கள் அப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்னர் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். கொரனோ பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக எளிமையாக செவலியர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தாண்டு வழக்கம்போல் உற்சாகமுடன் கொண்டாட செவிலியர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சக செவிலியர் ஒருவர் மூளைச்சாவு அடைந்த காரணத்தால் இந்தாண்டும் எளிமையாகவே கொண்டாடப்பட்டன. இதற்கிடையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அவர்களின் தன்னலமற்ற பணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.