மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: பாஜக பொன் ராதாகிருஷ்ணன்
மேகதாது விவகாரத்தின் பின்னணியிலும் திமுக தான் மிகப்பெரிய நாடகம் நடத்துகிறது. திமுக தான் இரட்டை வேடம் போடுகிறது.;
போன்.ராதாகிருஷ்ணன்
மேகதாதுவில் கர்நாடகாவால் நிச்சயம் அணை கட்ட முடியாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் மேலும் கூறியதாவது:
நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பும், எதிர்ப்பும் காட்டி வருகிற நிலையில், மத்திய ஒதுக்கீட்டில் வரும் இடங்களில் இதுவரை வழங்காமல் இருந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் நம் நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கிய காலக்கட்டத்தை பிரதமர் எட்டியுள்ளார். மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தபடும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு விஷயமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்.
நீட் தேர்வு பின்னணியை பார்த்தால் ஆரம்பத்தில் அது கொண்டு வரப்பட்டபோது மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தது. திமுக உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த கட்சிகளை அதனுடன் அங்கம் வகித்திருந்தது. 1984-இல் தான் வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் அகில இந்திய ஒதுக்கீடு கொண்டு வர சொல்கிறார்கள். 1986-இல் அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் 15 சதவீதமும், முதுகலை மருத்துவ படிப்பில் 25% ஒதுக்க சொன்னார்கள்.
2005-இல் மற்றொரு வழக்கில் 25% ஆக இருந்து கொண்டிருந்த முதுகலை இட ஒதுக்கீடு 50% ஆக உயர்த்துகின்றனர். 1986 முதல் 2007 வரைக்கும் ஒதுக்கீடு கொடுக்கவில்லை. 2007 உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த இரண்டு ஒதுக்கீடுகளும் எஸ்சி -எஸ்டி ஒதுக்கீட்டில் நடைமுறைபடுத்தபடுகிறது. ஆனால், 27% கொடுக்க வேண்டிய இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கவிலலை. ஏன் அந்த நேரத்தில் திமுக இதை கேட்கவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு செய்த மாபெரும் துரோகத்தை திமுக செய்துள்ளது.
அப்போதே நடைமுறைப்படுத்தியிருந்தால் பல ஆயிரம் மாணவர்கள் மருத்துவர் ஆகியிருப்பர். ஆனால் திமுக திட்டமிட்டு இதை நிறுத்தி வைத்தது. இன்று நாங்கள் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தோம் என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். அப்போது மத்திய அரசில் 6 திமுக அமைச்சர்கள் இருந்தும் ஏன் வாய் திறக்கவில்லலை. 2010-இல் கருணாநிதி முதல்வராகவும், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் சுகாதார அமைச்சராகவும் இருந்தனர். அப்போது எது அவர்களை தடுத்தது? கலைஞரின் ஒரு சுட்டு விரல் அசைவுக்கு மத்திய அரசு தலை வணங்கும் என்று அன்று சோனியா சொன்னார்.
அவ்வளவு சக்தி படைத்த நீங்கள், ஏன் இந்த ஓபிசி மாணவர்கள் பற்றி கவலைப்படாமல் இருந்தீரக்ள்? இன்று நீட் பற்றி பேச திமுகவுக்கும், காங்கிரசுக்கும் எந்தவித அருகதையும் இல்லை. துரோகத்தை செய்தவர்கள் இவர்கள். நீட்டை ஒழிப்பதாக சொன்னார்கள். தற்போது இந்த அண்டு அடுத்த ஆண்டு என தள்ளி போடுகிறார்கள்.
தமிழக மாணவர்களை கெடுக்காதீர்கள். அவர்கள் வாழ்க்கையில் மண்வாரி தூற்ற கூடிய வேலையை திமுக காங்கிரஸ் செய்ய கூடாது. கூடா நட்பு கேடில் விளையும் என்று தனது அரசியல் அனுபவத்தில் கலைஞர் சொன்னார். அவரே அதற்கு சாட்சியாக இருந்தார். தற்போது ஒவ்வொரு விஷயத்தையும் கருணாநிதி சமாதியில் சென்று தான் முடிவு எடுக்கிறார்கள். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகளை எடுத்து கொள்ள மாட்டீர்கள்.
2014 வரை நாடு முழுவதும் அரசு மருத்து கல்லூரிகள் எண்ணிக்கை வெறும் 189 ஆக இருந்த்து. 2014க்கு பிறகு ஆறு ஆண்டுகளில் 289 ஆக எண்ணிக்கை மாறியுள்ளது. 2014 வலை 215 ஆக இருந்த தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை 2014க்கு பிறகு 269 ஆக அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை பொறுத்தவரை எம்பிபிஎஸ்சில் ஆண்டுதோறும் 2014 வரை 54,348 ஆக இருந்த்து. 2014க்கு பிறகு 84,649 ஆக அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய வித்தியாசம்.
மாணவர்கள் எண்ணிக்கையை 56 % பிரதமர் உயர்த்தி காட்டியுள்ளார். அதேபோல் முதுகலை மாணவர்கள் எண்ணிக்கை 2014க்கு பிறகு 80% உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2019ல் நீட் தேர்வு எழுதி தகுதி பெற்றவர்கள் 48.57% பேர். 2020ல் 57.44 % மாணவர்கள் தகுதி பெற்றார்கள். ஒரு ஆண்டில் 10% அதிகமாகியுள்ளது. கிராம்ப் புற மாணவர்கள் நலனுக்காக அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது.
இந்த விஷயத்தில் அடுத்தவர் குழந்தைகளுக்கு, தனது இன்சியல் போடும் வேலையை செய்ய கூடாது. திமுகவினர் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தகுதி அற்றவர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அல்வா கொடுக்கிறது. திமுகவின் 68 வாக்குறுதிகளில் ஒன்று கடல் பாசியில் அல்வா தயாரிப்பது. அதை நிறைவேற்றாமல் கோடான கோடி மக்களுக்கு அல்வா கொடுத்து வருகிறது. திருநெல்வேலி அல்வா எல்லாம் திமுகவிடம் தோற்று விடும்.
நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வரவில்லை. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி தான் நீட் கொண்டுவரப்பட்டது. சட்டசபையை நாடகம் ஆடுவதற்காக திமுக பயன்படுத்தி வருகிறது. நீட் விவகாரத்தில் திமுக மாணவர்களை குழப்புவதாக கூறுகிறீர்கள், ஆனால், மேகதாது அணை விவகாரத்தில் பாஜக மக்களை குழப்பவில்லை. மேகதாது விவகாரத்தின் பின்னணியிலும் திமுக தான் மிகப்பெரிய நாடகம் நடத்துகிறது. திமுக தான் இரட்டை வேடம் போடுகிறது. மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.