நெல்லையில் வ.உ.சி பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

வ.உ.சி பிறந்த நாள் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

Update: 2021-09-05 17:35 GMT

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த கிருஷ்ணாபுரம் கலைமாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சியும், கலைமாமணி முத்து சந்திரன் தோல்பாவைக் கூத்து கலை நிகழ்ச்சியும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செக்கிழுத்த செம்மலின் சுதந்திர சங்கொலி முழக்கம் என்ற தலைப்பில் நடைபெற்று முடிந்த வாசகர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசாக மூக்குப்பீறி தேவதாசன், இரண்டாம் பரிசாக சுவர்ணவல்லி, மூன்றாம் பரிசாக மணிமாலா ஆகியோருக்கும், சிறப்பு பரிசாக செல்வம் மாரிமுத்து ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற பேச்சு போட்டியில் சுதேசி தந்த வ.உ.சி என்ற தலைப்பில் முதல் பரிசாக மகாராஜன் நகர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மதுஸ்ரீக்கும், இரண்டாம் பரிசாக முன்னீர்பள்ளம் அரசு பள்ளியை சேர்ந்த மகாலட்சுமிக்கும், மூன்றாம் பரிசாக பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த முத்துக்குமார்க்கும், சிறப்பு பரிசாக மாநகரம் அரசு பள்ளியை சேர்ந்த நித்தியஸ்ரீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற பேச்சு போட்டியில் சுதேசி தந்த வ.உ.சி என்ற தலைப்பில் முதல் பரிசாக சுபாஷினி பானுமதிக்கும், இரண்டாம் பரிசாக செல்வ வினிதாவுக்கும், மூன்றாம் பரிசாக மந்திராக்கும் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் நடைபெற்று முடிந்த கட்டுரைப் போட்டியில் வ.உ.சி யின் 150-வது பிறந்த நாளும், 75வது சுதந்திர தினமும் என்ற தலைப்பில் முதல் பரிசாக மந்திராக்கும், இரண்டாம் பரிசாக மகரஜோதிக்கும், மூன்றாம் பரிசாக பவித்ராவுக்கும் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

போட்டிகளில் நடுவராக பணிபுரிந்தவர்களுக்கும் மற்றும் வ.உ.சி சிதம்பரனாரின் அரிய வகை புகைப்படங்களைத் தொகுத்து வழங்கியவர்களுக்கும், கலை நிகழ்ச்சி நடத்திய கலைஞர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, மாவட்ட மைய நூலகர் மீனாட்சிசுந்தரம், எழுத்தாளர் நாறும்பூநாதன், அருங்காட்சியக காப்பாளர் சத்தியவள்ளி, கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகா கிருஷ்ணன், மற்றும் அரசு அலுவலர்கள் மாணவ- மாணவிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News