நெல்லையில் உலக தாய்ப்பால் வார விழா; கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள் பங்கேற்பு
நெல்லையில் உலக தாய்ப்பால் வார விழா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.;
ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள்.
நெல்லை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது. தாய்ப்பாலின் மகத்துவம் அதன் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து கோலங்கள், வாசகங்கள் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது. விழாவில் தாய்ப்பால் அதிகரிக்க கூடிய உணவுகள், கர்ப்பிணி பெண்களுக்கான உணவுகள், கீரை வகைகள், தானியங்கள் முதல் 1000 நாட்கள் குறித்த கண்காட்சி அங்கன்வாடி பணியாளர்கள் அழகுற அமைத்திருந்தனர்..
மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அளிக்கக்கூடிய உணவுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் மகத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டன.
தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.