நெல்லையில் வசிக்கும் வடமாநிலத்தவர் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
நெல்லை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் ஹோலிப் பண்டிகையை வண்ணம் பூசி உற்சாகமுடன் கொண்டாடினர்
நெல்லையில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் கலர் பொடிகளை முகத்தில் பூசியும், தாண்டியா ஆட்டம் ஆடியும் ஹோலி பண்டிகையை உற்சாகமுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்
ஹோலிகா என்ற அரக்கி தீயில் அழிந்த புராண கதையை நினைவு கூறும் வகையிலும், கோடை காலத்தை வரவேற்கும் வகையிலும் வடமாநிலத்தவர்கள் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் டவுன் வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் வடமாநில மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு உறவினர்கள், நண்பர்களை வீட்டிற்கு அழைத்து ஒருவர் முகத்தில் ஒருவர் வண்ண வண்ண கலர் பொடிகளை தூவி உற்சாகமுடன் கொண்டாடினர்.
மேலும் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் உடல் முழுக்க கலர் பொடிகளை பூசி மகிழ்ந்தனர். குறிப்பாக முதல் ஹோலி பண்டிகை கொண்டாடும் குழந்தைகளை பெற்றோர்கள் மடியில் அமரவைத்து உறவினர்கள் சுற்றி நின்று கம்புகளை கொண்டு தாண்டியா ஆட்டம் ஆடினர். தொடர்ந்து நண்பர்களை அழைத்து விருந்து வைத்து நாள் முழுவதும் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள்.