நெல்லை-சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2022-02-25 13:23 GMT

சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 4 மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நெல்லை மாநகரம் மற்றும் சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து மேற்படி வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற நடவடிக்கை எடுக்கவும், மிக முக்கிய குற்றங்களில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மக்களுக்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கவும் கேட்டுக்கொண்டார். போக்குவரத்து விதிகளை உரிய முறையில் செயல்படுத்தி சாலை விபத்துக்களை தடுக்கவும் ,தென் தமிழகத்தின் பொது அமைதியைக் குலைக்கும் குற்றவாளிகள் மீதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். திருட்டு குற்றச் சம்பவங்களைத் தடுக்க குற்றச் செயல்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை கண்டறிந்து ரோந்து பணிகளை அதிகப்படுத்துவதோடு கண்காணிப்பு கேமராக்களை நிறுவி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். முன்னதாக நான்கு மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை ஆணையாளர் துரைகுமார் , நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பர்வேஷ் குமார்,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் , தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News