நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் இலக்கிய விழா
பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் இலக்கிய விழாவில் உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் பங்கேற்றார்.
நெல்லை அரசு அருங்காட்சியகமும், பொதிகை தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய விழாவில் அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்கு பொதிகை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே. இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர். வி.ஜி.சந்தோசம் கலந்து கொண்டார். பொதிகை தமிழ்ச் சங்கம் சார்பில் வி.ஜி.சந்தோசத்திற்கு உலகத் திருக்குறள் நாயகர் என்ற விருது வழங்கப்பட்டது. விருதினை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் வ.சுந்தர், கலைபண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் வ.கோபாலகிருஷ்ணன், திருக்குறள் தகவல் மையத் தலைவர் முனைவர் வை.ராமசாமி, திருக்குறள் இரா.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விருது பெற்ற வி.ஜி.சந்தோசம் ஏற்புரை வழங்கினார்.
முன்னதாக நடந்த பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, ரங்கோலி கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜே.சி.ஐ மூலம் சமூகப் பணியாற்றும் சுப்புலட்சுமி,இளம் எழுத்தாளர் மு.சூடாமணி உட்பட பத்து நபர்களுக்கு அவர்கள் ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டி சிறப்பு விருதுகளை வி ஜி.சந்தோசம் வழங்கினார்.
நிகழ்ச்சியை சாரா டக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர். ஜெயமேரி தொகுத்து வழங்கினார். நிறைவாக கலையாசிரியை சொர்ணம் நன்றி கூறினார்.