நெல்லையில் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணி

தெற்குபஜார் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலையை கையிலேந்தி ஓசன்னா பாடல் பாடி சென்றனர்.

Update: 2022-04-10 05:02 GMT

பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தில் குருத்து ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு கையில் குருத்தோலையுடன் ஒசனா பாடல் பாடி சென்றனர். கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 2- ந்தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தையுடன் தொடங்கியது. அன்று முதல் அசைவ உணவு, ஆடம்பர செலவுகளை தவிர்த்து எளிய முறை வாழ்வை மேற்கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தவக்காலத்தில் புனித வாரத்தின் தொடக்க விழாவாக குருத்து ஞாயிறு கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு பாடுகளை ஏற்று மனித குலத்தை மீட்பதற்கு அரசர்க்கு உரிய மரியாதையுடன் ஜெருசேலம் நகருக்குள் நுழைவதை நினைவுபடுத்தும் விதமாக இந்த குருத்து ஞாயிறு நடைபெறுகிறது.

இதனையொட்டி பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தில் பங்கு இறைமக்கள் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி சென்றனர். புனித குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி புனித யோவான் கல்லூரி வாட்டர் டேங்க் வழியாக சென்று மீண்டும் புனித சவேரியார் பேராலயத்தை வந்தடைந்தனர். பேரணியில் சென்றவர்கள் கையில் குருத்தோலையை ஏந்தி ஒசனா பாடல்களை பாடி சென்றனர். தொடர்ந்து வரும் 14- ந்தேதி பெரிய வியாழன் பிரார்த்தனையும், 15- ந்தேதி புனித வெள்ளி பிரார்த்தனையும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News