பள்ளிக்கு செல்ல பஸ் வசதி வேண்டி பணிமனைக்குச்சென்று போராடிய மாணவர்கள்
மணப்படை வீடு கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு மனு அளித்தும் பலன் அளிக்காததால் மாணவர்கள் போராட்டம்
பள்ளிக்கு செல்ல பஸ் வேண்டி மனு அளித்தும் பலனளிக்காததால் பேருந்து பணிமனைக்கு குடும்பத்துடன் சென்று போராடிய மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக பேருந்தை ஏற்பாடு செய்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள்.அனுப்பி வைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், திருமலை கொழுந்துபுரம், மணப்படை வீடு, பொட்டல், கீழப்பாட்டம், திருவண்ணநாதபுரம், திம்மராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கு கொரோனா காலகட்டத்திற்கு முன்பு நான்கு பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டன. இதனால் அந்தப் பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், பெரியவர்கள் உட்பட சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருந்தது. ஆனால் தற்போது ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படும் நிலை உள்ளதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் திருநெல்வேலி பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றன. மேலும் முறையாக அந்தப் பேருந்தில் இயக்கப்படாததால் மாணவர்களும், கிராம மக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து 3 வாரங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேருந்துகளை இயக்க கோரி மனு அளித்தனர். ஆனால் மூன்று வாரங்கள் கடந்த பின்பும் இதுவரை போதிய பேருந்துகள் இயக்கப்படாத நிலை இருந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் மாணவர்கள் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் தங்களது பெற்றோர்களுடன் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு பேருந்து பணிமனையை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்த நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தினங்களுக்குள் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் மிகவும் காலதாமதம் ஆனதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் பேருந்து பணிமனையில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட அரசு பேருந்தில் வீடுகளுக்கு திரும்பினர்.