நெல்லையில் மாநில அளவிலான செஸ் போட்டி: 34 மாவட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்பு
பாளையங்கோட்டையில் மாநில அளவிலான செஸ் போட்டியை வனத்துறை அதிகாரி துவக்கி வைத்து செஸ் வீரர்களுடன் விளையாடினார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் உள்ள இன்டோர் ஸ்டேடியத்தில் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கான மாநில அளவிலான மூன்று நாட்கள் செஸ் போட்டி நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியினை வனத்துறை அதிகாரி டாக்டர்.முருகன் துவக்கி வைத்து மாணவர்களுடன் செஸ் விளையாடினார்.
50வது தமிழ்நாடு மாநில 19 வயதுக்கு உட்பட்ட ஜுனியர் செஸ் போட்டி 2022 மற்றும் 35வது தமிழ்நாடு மாநில 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான செஸ் போட்டி 2022 திருநெல்வேலி மாவட்ட செஸ் சதுரங்க முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் கழகம் இணைந்து நடத்தி வருகிறது.
இப்போட்டியானது மூன்று நாட்கள் நடைபெறும், இந்த போட்டியில் 34 மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 270 மாணவர்களில் 190 மாணவர்களும், 80 மாணவிகளும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் 2 மாணவர் மற்றும் 2 மாணவி இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் இந்தியா சார்பாக போட்டியிட கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்கள் தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பர்.
திருநெல்வேலி மாவட்ட சதுரங்க முன்னேற்ற கழகத்தின் தலைவர் ராமச்சந்திரன் Rtd Judge, செயலாளர் பால்குமார், பொருளாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.