நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒலி, ஒளி பெருக்கி உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி
புகார் மனு மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததைக்கண்டித்து தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு;
ஒலி, ஒளி பெருக்கி உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சிவன் கோவில் மேல ரத வீதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பாளையங்கோட்டையில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த உளவுத்துறை ஏட்டு ரவி என்பவரும், ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவரும் கணேசனுக்கு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணேசன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம் . இதைத்தொடர்ந்து, உளவுத்துறை ஏட்டு ரவி, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் கணேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த கணேசன், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து கணேசனை பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து, தற்கொலைக்கு முயன்ற கணேசன் கூறும்போது: எனக்கு இரண்டு பேர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் செய்தும், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மனவேதனை அடைந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.