கடும் குடிநீர் பற்றாக்குறை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கொக்கிரகுளம் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-30 09:10 GMT

கொக்கிரகுளம் பகுதியில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் இருந்து திருநெல்வேலி மாநகர் பகுதி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.

ஆனால் தாமிரபரணி கரையோரம் வசிக்கும் கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்சனை குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி  மேலப்பாளையம் சாலையை மறித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீர் கிடைப்பதை உறுதி அளித்தால் மட்டுமே தங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து அவசர, அவசரமாக மாநகராட்சி லாரி மூலம் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

லாரி மூலம் குடிநீர் விநியோகம் என்பது மிகக் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என்பதால் குழாய்களில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஒரு மணி நேரம் ஆகியும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Tags:    

Similar News