நெல்லையில் அலறும் ஆக்கிரமிப்பாளர்கள் : அதிரடி காட்டிய மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி!
நெல்லையில் வண்ணார்பேட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஆணையர் அகற்றினார்.
நெல்லையில், அருள்மிகு நெல்லையப்பர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனால், 4 ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து இருந்தார். நெல்லை மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் காணப்பட்டது.
அப்படியே ஆக்கிரமிப்பை அகற்றினாலும் அரசியல் செல்வாக்கு காரணமாக மீண்டும் மீண்டும் கடை முகப்புகளை கட்டி சாலையை ஆக்கிரமிப்பது தொடர்கதையாகவே உள்ளது. இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளதாக சரமாரியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் வண்ணார்பேட்டை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிரடியாக மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருக்கவே ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது என குறிப்பிட்டார்.
அதுபோல அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் தேரோட்டம் நடைபெறும் நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, எவ்வித தயக்கமின்றி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நேர்மையாக முனைப்பு காட்டும் ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு நெல்லை மாநகராட்சி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.