நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, வேலூர் உள்பட ஒன்பது மாவட்டங்களுக்கு இன்னும் ஓரிரு தினங்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வாக்காளர் பட்டியலை வெளியிட மாவட்ட ஊராட்சி முகமை திட்ட அலுவலர் பழனி பெற்றுக்கொண்டார்.
நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள், 204 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 1731 கிராம ஊராட்சி வார்டுகள் அமைந்துள்ளது. இன்று வெளியிட்ட பட்டியலின்படி மொத்தமுள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 3,30,487 ஆண் வாக்காளர்களும், 3,43,324 பெண் வாக்காளர்களும், 56 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 லட்சத்து 73 ஆயிரத்து 867 வாக்காளர்கள் உள்ளனர்.
அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 652 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் 28 ஆயிரத்து 203 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல் பிரதிநிதிகள் உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் வாக்களிக்க தனி வாக்குச்சாவடிகள் அமைப்பது உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.