நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச தின விழா
சமரச தீர்வு மையத்தில் முடித்து வைக்கப்படும் வழக்குகளுக்கு அப்பீல் கிடையாது என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளை தவிர்த்து, பேசி முடிக்கும் அளவில் உள்ள வழக்குகளில் சமரச மையங்கள் மூலம் இருதரப்பினர் அமர்ந்து பேசி முடித்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையங்கள் செயல்படுகிறது. துலாம் தமிழகத்தில் கடந்த 17 வருடங்களாக இந்த சமரசத் தீர்வு மையங்கள் மூலம் பல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி சமரச தின விழாவாக நீதிமன்ற வளாகங்களில் சமரசம் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீர் அகமது தலைமையில் சிறப்பு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர காவல்துறை ஆணையாளர் சந்தோஷ் குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய நீதிபதி நசீர் அகமது கூறும்போது, நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் 18 சமரச வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்கள் தகுதி பெற்ற திறமையான சமரச வழக்கறிஞர்கள் கிடப்பில் கிடந்த ஏராளமான வழக்குகள் இவர்கள் மூலம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சமரச வழக்குகளின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளின் மீது அடுத்த கட்டமாக மேல் நீதிமன்றத்திற்கு அப்பீல் செல்லமுடியாது, வழக்குக்கான ரிவீசன் கிடையாது. இந்த சமரச நீதிமன்றத்தில் சமரசர் மூலம் மேற்கொள்ளப்படும் வழக்குகளுக்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நீதிபதி நசீர் அகமது கூறும்போது-.
திறமையான வழக்கறிஞர்கள் சமரசர்களாக செயல்பட்டு பல வழக்குகளை முடித்து வைக்கிறார்கள். சில நீதிபதிகளும் சமரசர்களாக பணி புரிகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக சமரச தீர்வு மையங்கள் போதிய அளவு செயல்பட முடியவில்லை. இருந்தும் 280 வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்லபடியாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 18 சமரச வழக்கறிஞர்கள் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளனர். எனவே மக்கள் கட்டணமில்லாத இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் வழக்குகளை இரு தரப்பினரும் சமரசர் முன்பாக அமர்ந்து பேசி நல்ல முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.