பொது சுகாதார ஆராய்ச்சி திட்ட ஊழியர்களுக்கு முறையான சம்பளம் கிடைக்காமல் தவிப்பு
நெல்லையில் பொது சுகாதார ஆராய்ச்சி திட்ட ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் பொது சுகாதாரத் துறையின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை ஆராய்ச்சி செயல் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சுகாதார ஆய்வாளர்கள், இளநிலை உதவியாளர்கள், மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டு கிராமங்களில் கழிப்பறை உபயோகம் குறித்த போதிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக கிராம மக்கள் பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுத்தல் மற்றும் அதற்கான விழிப்புணர்வுகளை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்துதல், கழிப்பறை பயன்பாடு மற்றும் அவசியம் குறித்து போதிய அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறைக்கான ஆராய்ச்சி திட்ட அலுவலகம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர். கிராமங்கள் தோறும் செல்லும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் தற்போது வரை கிடைக்கவில்லை. இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் போனஸ் வழங்கப்பட்டு விட்டது.
ஆனால் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே பொங்கல் போனசை பிடித்துக்கொண்டு இன்னமும் ஊழியர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் ஊழியர்கள் மனம் குறிஞ்சிபடி தினமும் வேலைக்கு வந்து செல்கின்றனர். பொங்கல் போனஸ் மற்றும் சம்பளம் இழுத்தடிப்பு குறித்து ஊழியர்கள் சார்பில் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது உள்ள சூழலில் சம்பளம் இல்லாமல் பணி செய்வது சிரமமாக இருப்பதாகவும், வரும் ஏப்ரல் மாதம் பிறப்பதற்குள் 2 மாத சம்பளத்தையும் இணைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.