10 ஆண்டுகள் தண்டணை முடித்த சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - ஜவாஹிருல்லா
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாழ்த்து.
தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது, என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா நெல்லை வந்தார். இங்கு அவர் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-
இன்று ஆசிரியர் தினம், அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் , நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்தை தெரிவித்து கொள்கிறது. மேலும் சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் 150-வது பிறந்ததினத்தையொட்டி தமிழக அரசு 14 சிறப்பு அறிவிப்புகளை அறிவித்துள்ளது. வ.உ. சியின் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதேசி நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்தில் அப்போது 2 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் பங்குகளை வாங்கியவர் செயலாளராகவும் இருந்தவர் பக்கீர்முகமது ராவுத்தர். அதுபோன்று நெல்லையில் நடத்த வ.உ.சிக்கு எதிரான போராட்டத்தில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த அகமது யாசின் தனது இன்னுயிரையும் நீத்தார். எனவே இவர்கள் குறித்த பதிவுகளும் வ.உ.சியின் வாழ்கை வரலாற்றுடன் சேர்ந்து ஆவணமாக்க அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
வரும் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்றைய தினம் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு சிறைச்சாலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டணை பெற்று வரும் சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கந்து வட்டி போன்று சுங்கசாவடி கட்டணங்கள் மக்கள் மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த போது 32 சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது நிர்பயா வழக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
ஆனால் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தலைநகரில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி ராபியாசையத்து என்ற பெண் காவல் அதிகாரி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் இது கண்டிக்கத்தக்கது. இந்த செயலைக் கண்டித்து விரைவில் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.