திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தும் பணியில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தபால் வாக்களிக்க தகுதி வழங்கப்பட்டது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. பின்னர் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.
முன்னதாக தபால் வாக்குப்பதிவு விண்ணப்பங்களில் அலுவலர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். பின்னர் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை அளித்து விட்டுச் சென்றனர். அதேபோல் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு டவுனில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து தபால் வாக்குப் பதிவு நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த கட்டமாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வரும் 31ம் தேதி முதல் அவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு பெறப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.