மேலப்பாளையத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு
நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா அருகே பயணியர் நிழற்குடை அமைக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வேலையை சில தனிநபர்கள் தங்கள் சுயலாபத்திற்காக தடுக்க முயற்சிக்கிறார்கள். மேலும் தற்போது மாநகராட்சியால் பயணியர் நிழற்குடை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடமானது பேருந்து உள்ளிட்ட வாகன போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாத இடமாக இருக்கிறது.
தற்சமயம் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கைக்குழந்தைகளுடன் தாய்மார்களும்/ வயோதிகர்களும் வெயிலின் தாக்கத்தால் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு ஏற்கனவே திட்டமிட்ட இடத்தில் மாநகராட்சி பயணியர் நிழற்குடையை விரைந்து அமைக்க வேண்டும் என்று மேலப்பாளையம் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜமாத் சார்பாக இன்று மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக தென் மண்டல செயலாளர் ரசூல் மைதீன், தமுமுக மாவட்ட தலைவர் அப்பாஸ் ஹில்மி, இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் ஹயாத், காங்கிரஸ் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆஸாத்பாஷா , பாஷாபழனி பாபா, பாசறை தலைவர் எஸ்பி மைதீன், மமமூக ரமீஸ் அஹமது, தமுமுக மாவட்ட செயலாளர் அலிஃப் A. பிலால், ராஜா துணைச் செயலாளர் செய்யது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.