நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை தூய்மை திட்டம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற தூய்மை திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Update: 2022-04-06 07:00 GMT

நெல்லையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற தூய்மை திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற தூய்மை திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்து இன்று பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது:- திருநெல்வேலி மாவட்டத்தில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற திட்டத்தில் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் சார்பில் தூய்மையாக பராமரிப்பதற்கு செயல்படுத்தி ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும், சுகாதார நிலையங்களிலும் தூய்மைப் படுத்தும் பணிகள் ஒரு மாதம் நடைபெறவுள்ளது. மருத்துவமனைக்குள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துவர வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உடன் வருவோர்கள் குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பைகளை சேகரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் மட்டுமே போட்டு மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சுத்தமாக வைப்பதற்கு மருத்துவமனை நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் பங்கு மிகவும் மகத்தான பங்கு கொரோனா கால கட்டத்தில் நம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தூய்மையாக வைக்கவும், மேலும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கும் சிறப்பாக செயல்பட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை.தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை மக்க வைத்து உரமாக்கும் திட்டம் மற்றும் மறு சுழற்சிக்கு பயன்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மருத்துவமனைக்கு வருபவர்கள் மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைப்பது நம் ஒவ்வொருவருடையே கடமையாகும். இதனை மருத்துவமனை பணியாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன், 'கண்காணிப்பாளர் மரு.பாலசுப்பிரமணியன், மாநகர் நகர் நல அலுவலர் மரு.ராஜேந்திரன், 'மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News